‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று நான் தவறுதலாக உச்சரித்து விட்டேன் அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்

தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று நான் தவறுதலாக கூறிவிட்டேன் என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Update: 2018-09-27 23:15 GMT
கபிஸ்தலம்,

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சென்றடைந்து விட்டது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் மற்றும் வேளாண்மை இடு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கையிருப்பும் உள்ளது.

கடந்த 25-ந் தேதி தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் ஒரு வார்த்தை கூறி விட்டேன். “தமிழகத்தில் நல்லதொரு பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் பற்றியும், இந்த அரசை பற்றியும் தவறாக கூறுபவர்களின் நாக்கு அழுகி விடும் என்று கிராமத்து பாணியில் கூறுவதற்கு பதிலாக ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று தவறுதலாக உச்சரித்து விட்டேன்”. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

குறுவை தொகுப்பு திட்டத்துக்கு விவசாயிகளின் நலன் கருதி முதல்-அமைச்சர், ரூ.115 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வாழ்வாதாரத்தை காத்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செரீப் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்