தொழில் அதிபரை கடத்திய வழக்கு குற்றவாளிகளை பிடிக்க 4 தனி போலீஸ் படை

ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபரை கடத்திய வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-27 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஓரிக்கை திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் பசலுல்லாகான் (வயது 50). தொழில் அதிபர். இவர் காஞ்சீபுரம் மேட்டுத்தெரு, செங்கழுநீரோடை தெரு போன்ற இடங்களில் பல்பொருள் அங்காடிகள் நடத்தி வருகிறார். கடந்த 25-ந் தேதி இரவு இவரை மர்மநபர்கள் வேனில் கடத்தி சென்று ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டினர்.

பின்னர் பசலுல்லாகானை காஞ்சீபுரத்தை அடுத்த சித்தனகாவல் என்ற இடத்தில் கீழே இறக்கி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

தொழில் அதிபரை கடத்திய குற்றவாளிகளை கூண்டோடு பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி 4 தனி போலீஸ் படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் கொண்ட 4 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

காஞ்சீபுரத்தில் ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபரை கடத்திய குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்