பெண் தீக்குளித்து தற்கொலை

தியாகதுருகம் அருகே மகள்கள் சண்டை போட்டதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2018-09-27 21:30 GMT
கள்ளக்குறிச்சி, 

தியாகதுருகம் அருகே உள்ள தியாகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி காமக்கா (வயது 45). இவர்களுக்கு அம்சவள்ளி, சத்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டில் வைத்து அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர்களது சண்டையை காமக்கா அவ்வபோது விலக்கி விட்டு அவர்களை சமாதானப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அம்சவள்ளிக்கும் சத்யாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காமக்கா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அவர் அலறித் துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காமக்காவின் மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காமக்கா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்