கர்ப்பிணி மருமகளை எரித்து கொன்ற மாமியாருக்கு ஆயுள் தண்டனை ஐகோர்ட்டு உறுதி செய்தது
கர்ப்பிணி மருமகளை எரித்து கொன்ற மாமியாருக்கு கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.;
மும்பை,
கர்ப்பிணி மருமகளை எரித்து கொன்ற மாமியாருக்கு கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
எரித்து கொலை
நாசிக்கை சேர்ந்த பெண் ஹீராபாய் (வயது58). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது மகனுக்கு திருமணம் நடந்தது. திருமணமானது முதலே ஹீராபாய் மருமகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அந்த பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், சம்பவத்தன்று உணவு சரியாக சமைக்கவில்லை என கூறி ஹீராபாய் மருமகளை அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த மண்எண்ணெயை மருமகளின் உடலில் ஊற்றி தீயை கொளுத்தி போட்டார்.
இதில் உடல் கருகி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹீராபாயை கைது செய்தனர். மேலும் அவர் மீது நாசிக் ேகார்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இந்த தண்டனையை எதிர்த்து ஹீராபாய் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட்டில் நடந்த விசாரணை நிறைவிலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின.
இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில், ஹீராபாய்க்கு கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.