பூட்டிய வீட்டிற்குள் நிர்வாண நிலையில் பெண் பிணம்

பி.முட்லூரில் பூட்டிய வீட்டிற்குள் நிர்வாண நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-09-26 21:45 GMT
பரங்கிப்பேட்டை,


புதுச்சத்திரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மனைவி பிரேமா(வயது 50). அருணாசலம் இறந்து விட்டதால் பி.முட்லூர் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் பிரேமா தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் நாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரேமாவுக்கு நாகராஜன் செல்போன் மூலம் போன் செய்தார். ஆனால் பிரேமா செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து பண்ருட்டியில் உள்ள தனது பாட்டி சந்திராவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நாகராஜன், பிரேமா செல்போன் அழைப்பை எடுக்காதது பற்றியும், அவரை சென்று பார்த்து வருமாறும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று காலை சந்திரா பி.முட்லூர் வந்தார். அப்போது பிரேமாவின் வீடு வெளிப்புறமாக பூட்டியிருந்தது. பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அங்கு பிரேமா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இதை பார்த்து சந்திரா அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இதையடுத்து பிரேமாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமாவை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்