மைசூரு தசரா விழா சுவரொட்டி வெளியீடு மந்திரி புட்டரங்கஷெட்டி பாதியில் வெளியேறியதால் பரபரப்பு

மைசூரு தசரா விழா சுவரொட்டி நேற்று வெளியிடப்பட்டது. இந்த சுவரொட்டியில் தன்னுடைய படம் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த மந்திரி புட்டரங்கஷெட்டி, கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-26 23:00 GMT
மைசூரு, 

மைசூரு தசரா விழா சுவரொட்டி நேற்று வெளியிடப்பட்டது. இந்த சுவரொட்டியில் தன்னுடைய படம் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த மந்திரி புட்டரங்கஷெட்டி, கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவரொட்டி வெளியீடு

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக 12 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளதால், இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் சில நாட்களே இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மைசூரு தசரா விழா சின்னம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் தசரா கமிட்டியின் 2-வது கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தசரா விழாவின் சுவரொட்டி வெளியிடப்பட்டது. மாவட்ட பொறுப்பு மந்திரியும், உயர் கல்வித்துறை மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மந்திரிகள் சா.ரா.மகேஷ், புட்டரங்கஷெட்டி மற்றும் கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், மாநகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணிஷ்வரர் ராவ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புட்டரங்கஷெட்டி வெளியேறினார்

மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்ட சுவரொட்டியில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், ஜெயமாலா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் மந்திரி புட்டரங்கஷெட்டியின் படம் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த புட்டரங்கஷெட்டி, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதன்காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மந்திரி புட்டரங்கஷெட்டி, சுவரொட்டியில் என்னுடைய படம் இல்லாதது குறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிப்பேன் என்றார்.

கடந்த வாரம் நடந்த முதல் கூட்டத்தின்போது மைசூரு தசரா விழாவின் சின்னம் வெளியிடப்பட்டது. அதிலும் மந்திரி புட்டரங்கஷெட்டியின் படம் இடம்பெறவில்லை. இதனால் தனது அதிருப்தியை தெரிவித்த அவர், தன்னை தசரா கமிட்டி துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். சுவரொட்டியில் தன்னுடைய படம் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால், சுவரொட்டியிலும் அவருடைய படம் இடம்பெறாததால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.

புறக்கணிப்பு

இந்த கூட்டத்தில் நரசிம்மராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்வீர்சேட் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

மேலும் செய்திகள்