போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி - மகன் கைது

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் தெள்ளார் போலீஸ் நிலையம் முன்பு கணவன் - மனைவி தீக்குளிக்க முயன்றனர். இதுதொடர்பாக மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-26 22:30 GMT
வந்தவாசி,

வந்தவாசி தாலுகா நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 70). இவரது மகன் ரவி (47). இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட தகராறில் சொக்கலிங்கத்தை ரவி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சொக்கலிங்கம் தெள்ளார் போலீசில் ரவி மீது புகார் செய்தார். புகாரின் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து வந்தவாசி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் சொக்கலிங்கம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து தெள்ளார் போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்கு நேற்று போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கூறினர். இந்த நிலையில் சொக்கலிங்கம், அவரது மனைவி பட்டம்மாள் (65) இருவரும் தெள்ளார் போலீஸ் நிலையத்திற்கு சென்று காத்திருந் தனர். ஆனால் ரவி வரவில்லை.

ரவிக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாகவும் தாங்கள் கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும் போலீசாரை கண்டித்து சொக்கலிங்கம், பட்டம்மாள் இருவரும் போலீஸ் நிலையம் முன்பு தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி கொண்டனர். பின்னர் சொக்கலிங்கம் தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் தனது தோள் மீது போட்டிருந்த துண்டு தீ பிடித்தது. உடனே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று தீயை அணைத்து அவருடைய தோளில் இருந்த துண்டை உடனடியாக அகற்றிவிட்டனர். இதனால் இருவரும் காயமின்றி தப்பினர்.

அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் சொக்கலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ரவி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ரவியை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்