பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் குமாரசாமி பேச்சு

பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Update: 2018-09-26 22:30 GMT
பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

நேர்மையாக பணியாற்ற வேண்டும்

பெங்களூரு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் ரோஷினி திட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

பெங்களூருவில் சாலை குழிகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. பெங்களூரு நகர வளர்ச்சிக்காக அதிகாரிகளுடன் நான் கூட்டங்களை நடத்தி ஆலோசித்து இருக்கிறேன். அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். கோர்ட்டு சொல்லும் நிலையை அதிகாரிகள் ஏற்படுத்தக்கூடாது.

கன்னடத்தை பாதுகாப்போம்

அதிகாரிகள் தங்களின் பணியை சரிவர செய்தால், கோர்ட்டு உத்தரவிடும் நிலை ஏற்படாது. 2 நாட்கள் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும்படி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாய்மொழி கன்னடத்தை பாதுகாப்போம். அதே நேரத்தில் ஆங்கில மொழி அவசியம் ஆகும். கன்னட மொழிக்கு ஆதரவாக பேச என்னிடம் பலர் வருகிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் ஆங்கில பள்ளிகளில் படிக்கிறார்கள். ஏழை குடும்பங்களின் குழந்தைகள் மட்டும் ஆங்கிலம் கற்கக்கூடாது, கன்னடம் மட்டுமே கற்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்?.

ஆங்கிலம் கற்பார்கள்

கன்னடத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள், முதலில் தங்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ஏழைகளின் குழந்தைகள் தான் படிக்கிறார்கள். அதனால் 1-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு செல்வது தடுக்கப்படும்.

இந்த ரோஷினி திட்டம் மூலம் மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரம் உயரும். குழந்தைகள் சிறப்பான முறையில் ஆங்கிலம் கற்பார்கள். மாநகராட்சி பள்ளிகள் மீது இருக்கும் அவநம்பிக்கை இனி படிப்படியாக அகன்றுவிடும். மாநகராட்சி பள்ளிகளில் நான் மற்றும் துணை முதல்-மந்திரி நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

அங்குள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். சர்வதேச அளவில் மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி செலவிடப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

மேலும் செய்திகள்