சாகர்மாலா, மேக் இன் இந்தியா திட்டத்தில் தொழிற்சாலைகள் பங்கேற்க வேண்டும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
சாகர்மாலா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களில் தொழிற்சாலைகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னையில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கருத்தரங்கு நடைபெற்றது. துறைமுகம் தரும் பொருளாதார மேம்பாடு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறனை மேம்படுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்துக்கு இணையாக நாட்டின் பொருளாதாரம் ஒருங்கிணைந்திருக்கும்.
முடியும் நிலையில் திட்டங்கள்
தற்போது மத்திய அரசு சாகர்மாலா என்ற கடல்சார் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.8.57 லட்சம் கோடி மதிப்புள்ள 577 திட்டப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 2015-2035-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளன.
துறைமுக மேம்பாடு, துறைமுகங்களின் இணைப்புகள் மேம்பாடு, கடலோர சமுதாய மேம்பாடு ஆகியவற்றில்தான் அதிக முதலீட்டை மத்திய அரசு செய்து வருகிறது. ரூ.4.25 லட்சம் கோடி திட்ட மதிப்பில் சுமார் 490 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, அவற்றில் பல திட்டங்கள் முடியும் நிலையில் உள்ளன.
இலக்குகளை அடைய...
சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படுவதால், தேவையில்லாத செலவுகள் நீங்குவதோடு, போட்டிக்களத்தில் இந்திய துறைமுகங்கள் சிறப்பாக செயல்பட முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் கடல்சார் சமுதாயங்களின் பாரம்பரிய வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் மற்றும் நீர்வழி போக்குவரத்து போன்றவை மேம்படும்.
சாகர்மாலா, மேக் இன் இந்தியா ஆகிய மத்திய அரசின் திட்டங்களில் தொழிற்சாலைகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு கோணங்களில் திட்டமிடப்பட்டுள்ள இலக்குகளை இந்த நாடு அடைவதற்கு உதவ வேண்டும். இதில் சி.ஐ.ஐ. தனது கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
பெரும் பங்கு
இந்திய பொருளாதார வளர்ச்சியில் துறைமுகங்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கின்றன. வெளிநாட்டு வர்த்தகத்தில் 95 சதவீதத்தை துறைமுகங்கள் கொண்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய கப்பல் துறை இணைச் செயலாளர் கைலாஷ் குமா அகர்வால், சென்னை மற்றும் காமராஜர் துறைமுக தலைவர் ரவீந்திரன், தென் மண்டல சி.ஐ.ஐ. தலைவர் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.