துறைமுக முகத்துவாரத்தில் மணல் சேராமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் - முதல் அமைச்சர் நாராயணசாமி

துறைமுக முகத்துவாரத்தில் மணல் சேராமல் இருக்க நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2018-09-26 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி விட்டு கடந்த 10–ந் தேதி முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று மதியம் மீன்பிடி துறைமுக முகத்துவார பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் தேங்கி இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே துறைமுகத்தை கட்டும் போது முகத்துவாரத்தை திட்டமிட்டு கட்டி இருக்க வேண்டும். மணல் அடிக்கடி சேர்ந்துவிடுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

துறைமுகத்தின் முகத்துவாரம் பகுதி விரிந்து உள்ளது. இதனை சுருக்க வேண்டும். அப்போது தான் அடிக்கடி முகத்துவாரத்தில் மணல் சேருவதை தடுக்க வேண்டும். இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை வகுத்து மத்திய அரசிடம் நிதிஉதவி பெற்று துறைமுக முகத்துவாரத்தின் அளவை சுருக்க உள்ளோம். அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். துறைமுக முகத்துவாரத்தை தூர்வார டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ.1 கோடி செலவில் தூர்வாரப்பட உள்ளது. அந்த பணிகள் வருகிற 29–ந் தேதி தொடங்கப்படும். இந்த பணி ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்.

டெண்டர் விடுவதற்கு காலக்கெடு இருப்பதால் இந்த பணிகளை தொடங்க சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ.5½ கோடி செலவில் துறைமுகம் முழுவதும் தூர்வாரப்படும். இனி வரும் காலங்களில் துறைமுக முகத்துவாரத்தில் மணல் சேராமல் இருக்க நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.44 கோடி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்