துப்புரவு பணிகள் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்து சென்னை மாநகராட்சி சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து சென்னை மாநகராட்சியில் உள்ள 23 சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாநகராட்சி வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்(சி.ஐ.டி.யு.) பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு தலைமை தாங்கினார். இதில் 23 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பி.சீனிவாசலு நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகள் கையாள்வது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நடைமுறைப்படுத்தினார்கள். அந்த பணிகள் எதுவும் திருப்தியாக இல்லை. இந்தநிலையில் தற்போது மேலும் 8 மண்டலங்களின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது.
இதை எதிர்த்து நாங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்திவிட்டோம். அதிகாரிகளுடன் பல்வேறு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துவிட்டது. இன்றைய தினம் மாநகராட்சி கமிஷனரிடம்(பொறுப்பு) சந்தித்து எங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்து இருக்கிறோம். இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், வருகிற 1-ந்தேதி(திங்கட்கிழமை) அனைத்து சங்கங்களும் கூடி, அடுத்தக்கட்டமாக தீவிர போராட்டத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.