வீடுகளில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்குவதால் பொதுமக்கள் அவதி சாலை மறியலில் ஈடுபட முயற்சி

திருவொற்றியூரில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் வீடுகளுக்குள் தேங்குவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.;

Update: 2018-09-26 21:30 GMT
திருவொற்றியூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக விம்கோ நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் வீடுகளுக்குள் தேங்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை விம்கோ நகரில் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்து பொதுமக்கள் அனைவரையும் கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்