சீரான குடிநீர் வழங்கக்கோரி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை
சீரான குடிநீர் வழங்கக்கோரி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
சீரான குடிநீர் வழங்கக்கோரி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
முற்றுகை போராட்டம்
நெல்லை மேலப்பாளையத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கொண்டாநகரம் குடிநீர் ஏற்றும் நிலையத்தில் பிரதான குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் மேலப்பாளையம் மண்டல பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் குழாயில் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சில தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி அந்த பகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், மணடல தலைவர் சுல்தான், கட்சி நிர்வாகிகள் சொக்கலிங்க குமார், முகமது அனஸ்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீரான குடிநீர் வழங்க வேண்டும்
அப்போது அவர்கள் மேலப்பாளையம் மண்டலத்துக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதுவரை அனைத்து தெருக்களுக்கும் லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் காங்கிரசார் கோரிக்கை மனுவை அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.