இலங்கை தமிழர் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க.வை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் தமிழ்மகன் உசேன் பேச்சு
இலங்கை தமிழர் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க.வை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்மகன் உசேன் பேசினார்.
நெல்லை,
இலங்கை தமிழர் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க.வை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்மகன் உசேன் பேசினார்.
பொதுக்கூட்டம்
நெல்லை மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி., முத்துக்கருப்பன் எம்.பி., இணை செயலாளர் ஞானபுனிதா, துணை செயலாளர்கள் பார்வதி பாக்கியம், செவல்முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் ராஜலட்சுமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், தலைமை கழக பேச்சாளர் முகவை கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள்.
போர் குற்றவாளியாக
கூட்டத்தில், தமிழ்மகன்உசேன் பேசுகையில் ‘ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்., ஒன்றாக இருந்த ஈழத்தமிழர்களை பல கோஷ்டிகளாக பிரித்தவர் கருணாநிதி. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது. இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர்குற்றவாளியாக அறிவித்து அவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்‘ என்றார்.
அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், தி.மு.க.வினர் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று நமது ஆட்சி மீது குறை சொல்லி வருகிறார்கள். அவர்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைதேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்‘ என்றார்.
இன்பதுரை எம்.எல்.ஏ.
தேர்தல் பிரிவு இணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. பேசுகையில், இலங்கையில் நடந்த போரில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்திய அரசு உதவியது என்று ராஜபக்சே தெரிவித்து உள்ளார். எனவே அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் தான் உதவி உள்ளது. எனவே ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர்குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பாக உள்ளது. இந்த கட்சியையும், ஆட்சியையும், யாராலும் அசைக்க முடியாது என்றார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சுதா பரமசிவன், மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., மாநில விவசாய பிரிவு இணை செயலாளர் ஆனைக் குட்டி பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் பெரியபெருமாள், கண்ணன், ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ஜெரால்டு, இ.நடராஜன், சிறுபான்மைபிரிவு செயலாளர் கபிரியேல் ஜெபராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சக்திவேல்முருகன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் அரிகரசிவசங்கர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சேர்மபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.