குடிபோதையில் பணியாற்றிய வனகாப்பாளர் பணியிடை நீக்கம்

குடிபோதையில் பணியாற்றிய வனகாப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2018-09-26 22:45 GMT

கூடலூர்,

கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, பிதிர்காடு, சேரம்பாடி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டுயானை, சிறுத்தைபுலி, கரடி, புள்ளி மான் போன்ற வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகளை சேதப்படுத்துவதோடு, மனிதர்களையும் தாக்கி வருகின்றன. எனவே வனவிலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க அனைத்து வனச்சரகங்களிலும் வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு உடனடியாக வனத்துறையினர் சென்று இரவு, பகலாக விரட்டும் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால் வன ஊழியர்கள் தங்களது பணியிடங்களிலேயே வசிக்க வேண்டும் என்று கூடலூர் கோட்ட வன அலுவலர் ராகுல் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஓவேலி வனச்சரக பகுதிகளில் நேற்று முன்தினம் வனச்சரகர் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அதே வனச்சரகத்தில் பணியாற்றி வரும் வனகாப்பாளர் கொட்ராஜ் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது. உடனே அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் குடிபோதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து பணியின்போது குடிபோதையில் இருந்த கொட்ராஜை பணியிடை நீக்கம் செய்து வனச்சரகர் குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடலூர் கோட்ட வன அலுவலர் ராகுல் சேரம்பாடி வனச்சரகத்தில் நடத்திய ஆய்வில், குடிபோதையில் பணியில் இருந்த வனகாப்பாளர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்