பந்தலூர்–சேரம்பாடி சாலையில் காட்டுயானைகள் உலா; வாகன ஓட்டிகள் பீதி

பந்தலூர்– சேரம்பாடி சாலையில் காட்டுயானைகள் உலா வந்ததால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Update: 2018-09-26 22:30 GMT

பந்தலூர்,

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி, சப்பந்தோடு, காப்பிக்காடு, சேரங்கோடு, நாயக்கன்சோலை, கொளப்பள்ளி, அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு–2 ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் அடிக்கடி முகாமிட்டு, குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் தாக்குகின்றன. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு–2 பகுதியில் உள்ள பத்துலைன்ஸ் என்ற இடத்தில் 8 காட்டுயானைகள் குடியிருப்புகளை விடிய, விடிய முற்றுகையிட்டன. இதனால் அங்கு வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். இதற்கிடையே காட்டுயானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று அதிகாலை சேரம்பாடி வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.

ஆனால் அங்கிருந்து வெளியேறிய அவை வனப்பகுதிக்குள் செல்லாமல், காலை 6 மணியளவில் காப்பிக்காடு என்ற இடத்தில் பந்தலூர்– சேரம்பாடி சாலையில் உலா வந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி அந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மீண்டும் காட்டுயானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று அய்யங்கொல்லி அருகே தட்டாம்பாறை, கோட்டபாடி, மழவன்சேரம்பாடி, ஆகிய பகுதிகளில் 9 காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் புகுந்த அவை விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. இதையடுத்து பிதிர்காடு வனவர் ராமச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

மேலும் செய்திகள்