குப்பைக்கழிவுகளை அகற்றக்கோரி காடாம்பாடி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

சூலூர் அருகே குப்பைக்கழிவுகளை அகற்றக்கோரி காடாம்பாடி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-09-26 22:15 GMT

சூலூர்,

சூலூர் அடுத்த விமானபடை தளம் அருகே காடாம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதி சுற்றிலும் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதையடுத்து அந்த பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றக்கோரியும், இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த கோரியும் பொதுமக்கள் கோரிக்கை பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். ஆனால் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதால், அங்கு வந்த சூலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் திரண்டனர். அங்கு ஊராட்சி அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் செயலர் ஆகியோர் ஊராட்சி அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

உடனே சூலூர் போலீசார் இது குறித்து சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செல்போனில் பேசினர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த காடாம்பாடி ஊராட்சி அலுவலர் சரவணன் பொது மக்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். குப்பைகளை காடாம்பாடி ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இன்னும், ஒரு வார காலத்துக்குள் குப்பைகளை அகற்ற வில்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று கூறினர்.

மேலும் செய்திகள்