ஏர்வாடியில் கைதான பாகிஸ்தான் முதியவருக்கு சட்ட ரீதியான உதவி

ஏர்வாடியில் கைதாகி சிறையில் உள்ள பாகிஸ்தான் முதியவர் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததுடன் வக்கீல் நியமித்து ராமநாதபுரம் சட்டபணிகள் ஆணைக்குழு மனிதநேய உதவி செய்துள்ளது.

Update: 2018-09-26 23:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அவர் பாகிஸ்தான் கராச்சி பகுதி ஜோடியார்பஜார் முகமது சாய் தெருவை சேர்ந்த அலிமுகமது மகன் முகம்மது யூனிஸ்(வயது 67) என்பது தெரிந்தது.

இவரிடம் பல்வேறு வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும், போலி ஆதார் கார்டும் இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் இவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்துவதற்காக கள்ளத்தோணியில் இந்தியா வந்து இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஏர்வாடி போலீசார் முகமது யூனிசை சட்டவிரோதமாக வந்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக கைது செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைக்காக சென்னையில் இருந்து அழைத்து வந்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 2-ல் போலீசார் ஆஜர்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முதியவர் முகமது யூனிசுக்கு வழக்கினை நடத்துவதற்கு இங்கு யாரும் இல்லை என்றும், தனக்கான ஆதரவாக ஒருவரும் இல்லாததால் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை அனுபவித்துவிட்டு தனது சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோர்ட்டில் ஆஜரானபோது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நீதிபதி இசக்கியப்பன் பாகிஸ்தான் முதியவருக்கு வழக்கில் ஆஜராகி வாதாடுவதற்காக ராமநாதபுரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் இலவசமாக வக்கீல் நியமனம் செய்து கொடுக்க பரிந்துரை செய்தார். இதன்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் பாகிஸ்தான் முதியவருக்காக வழக்கில் ஆஜராகி இலவசமாக வாதாட வக்கீல் குணசேகரன் என்பவரை நியமித்து ஏற்பாடு செய்தார்.

மேலும் பாகிஸ்தான் முதியவர் கைதாகி சிறையில் உள்ள விவரங்களை குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர் குடும்பத்தினருடன் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்யுமாறு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மத்திய சட்டபணிகள் ஆணைக்குழுவினர் அதற்கான துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்பயனாக ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா-பாகிஸ்தான் தூதரக நல்லுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறும் நல்லுறவு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் முதியவர் குறித்து அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் முதியவரின் குடும்பத்தினரிடம் முகமது யூனிஸ் கைதாகி தமிழக சிறையில் உள்ள தகவலை தெரியப்படுத்தி உள்ளனர். முகமது யூனிஸ் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் தவித்து வந்த அவரின் குடும்பத்தினர் அவர் தமிழக சிறையில் உள்ள தகவலை தெரிந்து பாகிஸ்தான் தூதரக உதவியுடன் சிறையில் உள்ள முகமது யூனிசுடன் தொடர்பு கொண்டு பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் கூறியபோது, பாகிஸ்தான் முதியவர் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது முக்கியமல்ல. அதுவிசாரணை தொடர்பான விஷயம். ஆனால், சட்டவிதிகளின்படி அவருக்கு சட்ட உதவி கிடைக்க செய்வதோடு, அவர் குறித்த தகவல் தெரியாமல் இருந்த குடும்பத்தினருக்கு விவரங்களை தெரிவிப்பது சட்டபணிகள் ஆணைக்குழுவின் கடமை. அதனைதான் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்