கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

கூடங்குளம் 2-வது அணுஉலையில் நேற்று காலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

Update: 2018-09-26 21:30 GMT
வள்ளியூர், 

கூடங்குளம் 2-வது அணுஉலையில் நேற்று காலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

கூடங்குளம் அணு மின்நிலையம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின்நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அவ்வப்போது 2 அணு உலைகளிலும் பழுது ஏற்படுவதும், அதனை சரி செய்து மீண்டும் மின்உற்பத்தி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி இரண்டாவது அணு உலையில் டர்பன் ஜெனரேட்டர் ஒழுங்குபடுத்தும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதனை சரிசெய்யும் பணியில் அணு மின்நிலைய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

அந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை 10.35 மணி அளவில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது 2-வது அணுஉலையில் 300 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனை அடையும் என கூடங்குளம் அணு மின்நிலைய வட்டாரம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே முதலாவது அணுஉலையானது கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்