மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நாளை நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்து வணிகர்கள் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்து வணிகர்கள் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
கடையடைப்பு
தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் ஜான்பிரிட்டோ தலைமை தாங்கினார். செயலாளர் முனியசாமி, பொருளாளர் வீரபத்திரன், மொத்த விற்பனை தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இணையதளம் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதால், நாடு முழுவதும் உள்ள சுமார் 7 லட்சம் மருந்து வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே போன்று தடை செய்யப்பட்ட மருந்துகள் சமூகவிரோதிகளிடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால் இணையதள மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய மருந்து வணிகர் சங்கம், மாநில மருந்து வணிகர் சங்கம் இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்துகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர் சங்கமும் நாளை (வெள்ளிக்கிழமை) கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
யார்-யார்?
கூட்டத்தில் கோபால், ஆறுமுகம், கண்ணன், சரவணன், செல்வம், குருராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 21-ந் தேதி முதல் மருந்து வணிகர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.