தூத்துக்குடி பகுதி தீவுகளில் போதைப் பொருள் பதுக்கலா? கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
தூத்துக்குடி பகுதி தீவுகளில் போதைப் பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என்று கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பகுதி தீவுகளில் போதைப் பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என்று கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
போதைப் பொருள்
சமீபகாலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து உள்ளன. இதனால் கடலோரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடலோர பாதுகாப்பு போலீசார் ஏதேனும் கடத்தல் நடக்கிறதா? என்று கடலோரங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று அதிரடி சோதனை நடத்த கடலோர பாதுகாப்பு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தீவுகளில் சோதனை
அதன்படி தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார், ஜானகிராமன், வசந்தகுமார், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் அருண் மற்றும் போலீசார் நேற்று காலையில் முயல் தீவுக்கு வந்தனர். அங்கு முட்புதர்கள் மற்றும் கடற்கரையோரத்தில் உள்ள கற்களுக்கு இடையே ஏதேனும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா, புதிதாக ஏதேனும் தோண்டப்பட்ட அடையாளங்கள் உள்ளதா? என்று அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். அதன்பிறகு வான்தீவு பகுதியிலும் சோதனை நடத்தினர்.
கடலோர பாதுகாப்பு போலீசார் படகில் சென்று சந்தேகப்படும்படியான ஏதேனும் நடமாட்டங்கள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்வில் எந்தவிதமான போதை பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.