மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்: லாரி கிளீனர் உள்பட 2 பேர் பலி

வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் லாரி கிளீனர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-26 21:30 GMT
வத்தலக்குண்டு,


வத்தலக்குண்டு அருகே விருவீடு செம்மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் வெற்றி (வயது 18). அதே பகுதியை சேர்ந்த போஸ் மகன் அருண் (17). இவர்கள் இருவரும் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள், விருவீட்டில் நடைபெற்ற கோவில் திருவிழா கலைநிகழ்ச்சியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மோட்டார் சைக்கிளை வெற்றி ஓட்டினார். அருண் பின்னால் அமர்ந்திருந்தார். வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் சாந்திபுரம் பிரிவு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த பழனிக்குமார் (32) என்பவர் வத்தலக்குண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த வெற்றியையும், அருணையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெற்றி பரிதாபமாக இறந்தார்.

அருணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பழனிக்குமாருக்கு அருணாதேவி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்