மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பள்ளி ஊழியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-26 22:00 GMT
ஒட்டன்சத்திரம்,


ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர், ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அந்த பள்ளியில் படிக்கிற மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சீலன்ஸ்டீபன் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் தனியார் பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி பஸ்சில் உதவியாளராக இருக்கும் ஒட்டன்சத்திரம் வள்ளுவர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (45) என்பவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

மாணவிகள் பஸ்சில் ஏறும்போது உதவி செய்வதுபோல் அவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்