விவசாயிகளின் எதிர்ப்புக்கு இடையே புதிய குடிநீர் திட்டத்துக்கு ஆய்வு செய்த அதிகாரிகள்
விவசாயிகளின் எதிர்ப்புக்கு இடையே புதிய குடிநீர் திட்டத்துக்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கூடலூர்,
முல்லைப்பெரியாற்றின் தலைமதகு பகுதியான லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் புதியதாக தடுப்பணை கட்டப்பட உள்ளது. பின்னர் அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும், விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் விவசாயிகள் கருதுகிறார்கள். எனவே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பூமிபூஜை செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பூமிபூஜை செய்யாமல் அதிகாரிகளும் திரும்பி சென்றனர்.
இந்தநிலையில் மதுரை மாநகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகள், லோயர்கேம்ப் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், முல்லைப்பெரியாறு ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். மேலும் குடிநீர் திட்ட பணிகள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்ட இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அந்த இடத்தில் உள்ள நீரின் ஆழம், அடிப்பகுதியில் தேங்கியுள்ள சகதி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மதுரை மாநகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.