கோவில்களில் பூஜை பொருள் விற்பதற்கான அனுமதியை திரும்ப பெற்றுள்ளோம் - மதுரை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை

‘அமைச்சரவை முடிவுக்கு எதிராக இருப்பதால் கோவில்களில் பூஜை பொருள் விற்பனைக்கான அனுமதியை திரும்ப பெற்றுள்ளோம்’ என்று மதுரை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-09-26 23:00 GMT

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2–ந் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த 19 கடைகள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவத்தையடுத்து இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில் வளாகங்களில் செயல்பட்டு வந்த கடைகளை அகற்றுவது என்று தமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன்பேரில் கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து கோவில் வளாக கடை உரிமையாளர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த கோர்ட்டு, வருகிற டிசம்பர் 31–ந் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்ளலாம். அதற்கு பிறகு அந்த கடைகளை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

கடைகளுக்கு மாற்று இடம் வழங்கும் வரை கோவில்களில் தொடர்ந்து கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் செயல்பட்ட கடை உரிமையாளர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை வக்கீல் சண்முகநாதன் மற்றும் அரசு தரப்பு வக்கீல்கள் ஆஜராகி கூறியதாவது:–

கடந்த பிப்ரவரி 2–ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்தை அடுத்து அதே மாதம் 12–ந் தேதி தமிழக முதல்–அமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதே நேரத்தில் பக்தர்களின் நலன் கருதி பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை மட்டும் கோவில் வளாகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்று கடந்த ஜூன் மாதம் அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் ஏராளமான கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. பூஜை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதித்து சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுக்கு எதிராக உள்ளது. எனவே பூஜை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கலாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெற்றுவிட்டோம்.

இவ்வாறு அரசு தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்