டி.என்.பாளையம் அருகே வாகனங்களில் வருபவர்களை துரத்தும் ஒற்றை யானை
டி.என்.பாளையம் அருகே வாகனங்களில் வருபவர்களை ஒற்றை யானை துரத்துகிறது.
டி.என்.பாளையம்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, தலமலை, டி.என்.பாளையம், கேர்மாளம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்தநிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள குன்றி வனப்பகுதியில், அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் ஒரு ஒற்றை யானை அடிக்கடி ரோட்டில் வந்து நின்றுகொள்கிறது. அப்போது பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை மறிக்கிறது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்துகிறது.
இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வனப்பகுதி முழுவதும் மழை இல்லாமல் வறட்சியாக காணப்பட்டது. தற்போது சில நாட்களாக மழை பெய்கிறது. இதனால் சாலையோரம் உள்ள பச்சை புற்கள் முளைத்துள்ளன. அதனால் தீவனங்களை தேடி ஒற்றை யானை ரோட்டில் வந்து நிற்கிறது. அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களையும் துரத்துகிறது. யானை நிற்பதை தூரத்தில் பார்த்துவிடுபவர்கள், வாகனத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் வனத்துறை அதிகாரிகள் ரோட்டில் உலவும் ஒற்றை யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு விரட்ட வேண்டும்‘ என்றார்கள்.