கார் மோதி 2 பேர் காயம் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய இந்தி நடிகர் கைது
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி 2 பேர் காயமடைந்த சம்பவத்தில் இந்தி நடிகர் தலிப் தகிலை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி 2 பேர் காயமடைந்த சம்பவத்தில் இந்தி நடிகர் தலிப் தகிலை போலீசார் கைது செய்தனர்.
விபத்து
மும்பை கார் பகுதியை சேர்ந்த இளம்பெண் ெஜனிட்டா காந்தி (வயது21). இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர் கவுரவ் சுக் (22) என்பவருடன் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கார் சி.டி. சாலையில் உள்ள சின்னா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த இருவரும் லேசான காயம் அடைந்தனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. ஆனால் விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக அந்த காரால் முன்னேறி செல்ல முடியவில்லை.
நடிகர் கைது
உடனே ஆட்டோவில் இருந்து இறங்கிய 2 பேரும், அங்கு சென்று டிரைவரை கீழே இறங்கும்படி சத்தம் போட்டனர். அப்போது, காரில் இருந்து இந்தி நடிகர் தலிப் தகில் (65) இறங்கினார். அவர் தான் அந்த காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதுபற்றி இருவரும் கார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, நடிகர் தலிப் தகில் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.