அம்மன் கோவிலில் பணத்தை திருடிவிட்டு முட்புதரில் உண்டியல் வீச்சு
வாழைப்பந்தல் அருகே அம்மன் கோவிலில் பணத்தை திருடி விட்டு முட்புதரில் உண்டியலை வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராணிப்பேட்டை,
வாழைப்பந்தல் அருகே உள்ள புதுசொரையூரில் எட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவிலை நிர்வாகிகள் பூட்டி சென்றனர். நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை காணவில்லை.
இதற்கிடையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் கோவில் அருகே முட்புதரில் கிடப்பது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை தூக்கி சென்று, அதனை உடைத்து பணத்தை திருடி கொண்டு உண்டியலை முட்புதரில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.
இந்த உண்டியலை மாதத்திற்கு ஒருமுறை திறந்து பணம் எண்ணுவது வழக்கம். அதனால் தற்போது உண்டியலில் எவ்வளவு பணம் திருட்டு போனது என்பது தெரியவில்லை.
ஏற்கனவே இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மாம்பாக்கத்தில் உள்ள எட்டியம்மன் கோவிலிலும் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவையும் திறக்க முயன்றுள்ளனர். ஆனால் பீரோவை திறக்க முடியாததால் அவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக வாழைப்பந்தல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வாழைப்பந்தல் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.