ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதல்; மருந்து விற்பனை பிரதிநிதி பலி

கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியதில் செஞ்சியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-09-25 21:30 GMT
கடலூர், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் சித்தரசூர் வடபுறத் தெருவை சேர்ந்த நாகமுத்து மகன் சீனுவாசன்(வயது 25). கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் மருந்து கம்பெனியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியில் சேர்ந்த இவர், கடலூரில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் பணி நிமித்தமாக சீனுவாசன் நேற்று காலை கடலூரில் இருந்து ஸ்கூட்டரில் பண்ருட்டிக்கு புறப்பட்டார். கூத்தப்பாக்கம் தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சீனுவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சீனுவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

டிரைவர் அதிவேகமாக டிப்பர் லாரியை ஓட்டி வந்ததுதான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்