தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 740 செவிலியர் பணியிடங்கள் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும் அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 740 செவிலியர் பணியிடங்கள் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-09-25 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த பழைய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி அகற்றப்பட்டு ரூ.6 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் வரவேற்றார். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டரை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் அதி நவீன வசதிகள் கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது. உடல் முழுவதையும் அரை மணி நேரத்தில் எடுக்க வேண்டிய பரிசோதனையை இந்த நவீன கருவி மூலம் 10 நிமிடத்திற்குள் செய்ய முடியும்.

வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய அதிநவீன கருவி ரூ.18 கோடியில் இன்னும் 4 மாதத்திற்குள் நிறுவப்பட உள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் கட்டிடம் கட்டப்படும். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.150 கோடியில் கட்டப்பட்டு வரும் ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை வெகு விரைவில் திறக்கப்படும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 740 செவிலியர் பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும். மேலும் 3,300 செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாரதி, நிலைய மருத்துவ அலுவலர் குமரவேல், நுண்கதிர்துறை பேராசிரியர் சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கூறுகையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள சீமான் மகப்பேறு மையம் இங்கே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் வங்கி தொடங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய் திட்டத்தின் கீழ் விபத்து காய சிகிச்சை மையங்களில் ஒன்றாக கும்பகோணம் அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 34 டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் 30 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். மீதி உள்ள 4 உயர் பதவிக்கான டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும் செய்திகள்