சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுக்க வேண்டாம் என அறிவுரை
கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி எழுந்துள்ள நிலையில், சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
பெங்களூரு,
கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி எழுந்துள்ள நிலையில், சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுக்க வேண்டாம் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி அமைந்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின.
இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார். இதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் யாராவது ராஜினாமா கடிதத்தை கொடுத்தால், அதை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், கட்சியிலேயே நீடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 25-ந் தேதி(நேற்று) பெங்களூருவில் நடைபெறும் என்று சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா அறிவித்தார்.
அதன்படி கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார், முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
கட்சியை விட்டு விலகும் முடிவை...
இதில் பேசிய தலைவர்கள், கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம், கட்சி கட்டுப்பாடு, ஒழுக்கத்தை மீறி செயல்பட வேண்டாம் என்றும், கட்சியை விட்டு விலகும் முடிவை எடுக்க வேண்டாம் என்றும், உரிய நேரத்தில் பதவி உங்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவுறுத்தினர். தேவை இல்லாத வார்த்தைகளை பேசி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.