நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடியூரப்பாவை ஓரங்கட்ட பா.ஜனதா முடிவு?
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடியூரப்பாவை ஓரங்கட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடியூரப்பாவை ஓரங்கட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
75 வயதை தாண்டிவிட்டார்
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியது. ஆனால் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் அந்த முயற்சி வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.
அடுத்த ஆண்டு(2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் செயல்பாட்டை பொறுத்து, எடியூரப்பாவை கட்சியில் இருந்து படிப்படியாக ஓரங்கட்ட அக்கட்சியின் தேசிய தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காரணம், எடியூரப்பா 75 வயதை தாண்டிவிட்டார். இனி அவரால் மாநிலத்தில் துடிப்பாக சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது கடினம் என்று கட்சி தலைமை கருதுவதாக சொல்லப்படுகிறது.
22 தொகுதிகளில்...
மேலும் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி இருந்தால் மட்டுமே, நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 22 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி தொடர்ந்தால், பா.ஜனதா வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பது கடினம் என்று கர்நாடக பா.ஜனதாவில் ஒரு பிரிவினர் கூறுகிறார்கள்.