குழந்தை நடப்பதற்கு பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 15 பவுன் நகை மோசடி மேடவாக்கத்தில் கோவில் பூசாரி கைது
மேடவாக்கத்தில் குழந்தை நடப்பதற்கு பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 15 பவுன் நகையை மோசடி செய்த கோவில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மேடவாக்கம், புதுநகர் ஜெயபிரகாஷ் தெருவில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கோவில் நிர்வாகியாகவும், பூசாரியாகவும் இருப்பவர் தினேஷ்(வயது 26). இந்த கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக பெரம்பூரை சேர்ந்த லதா ரமேஷ் (45) என்பவர் வந்து சாமி கும்பிட்டு சென்றார்.
இவருக்கு மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையால் சரியாக நடக்க முடியவில்லை. கோவிலுக்கு வந்த லதா ரமேஷிடம் உங்கள் குழந்தையை நடக்க வைக்க சிறப்பு பரிகாரம் செய்யவேண்டும் என்று தினேஷ் கூறினார். இதற்கு வீட்டில் உள்ள நகைகளை கொண்டு வந்தால் அதை வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும் என்றார்.
நகைக்கு பதில் கருங்கல்
இதை நம்பிய லதா ரமேஷ் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை எடுத்துவந்து தினேஷிடம் கொடுத்தார். அவர் சிறப்பு பூஜை செய்து ஒரு சொம்பில் நகைகளை வைத்து மூடிக்கொடுத்தார். 90 நாட்கள் இந்த சொம்பை திறக்காமல் பூஜை செய்துவந்தால் குழந்தை நடக்கும் என்றும் கூறினார்.
அதன்படி லதா ரமேஷ் நகைகள் இருந்த சொம்பை வீட்டிற்கு கொண்டுசென்று பூஜை செய்துவந்தார். ஆனாலும் குழந்தை நடக்காததால் விரக்தி அடைந்த லதா ரமேஷ் சொம்பை திறந்து பார்த்தபோது அதில் நகைகளுக்கு பதிலாக கருங்கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கைது செய்தனர்
தினேஷிடம் சென்று தனது நகைகளை திருப்பித்தரும்படி கேட்டார். ஆனால் அவர் தராமல் ஏமாற்றியதால் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்கைராஜ், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கோவில் பூசாரி தினேஷ் இதுபோல் பலரிடம் பரிகாரம் செய்வதாக கூறி நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து தினேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.