இலங்கை தமிழர்களை பற்றி பேசுவதற்கு தி.மு.க., காங்கிரசுக்கு அருகதை இல்லை

இலங்கை தமிழர்களை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை என அமைச்சர் தங்கமணி பேசினார்.

Update: 2018-09-25 22:00 GMT
ராசிபுரம், 

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகர், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் இ.கே.பொன்னுசாமி, வக்கீல் தாமோதரன், எல்.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சேவல் ராஜூ, செய்தி தொடர்பாளர் சத்யன் ஆகியோர் பேசினர்.

பின்னர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக பலமுறை குரல் கொடுத்தார். இந்திய அரசு இலங்கையில் போருக்கு உதவுவது கண்டிக்கத்தக்கது என கண்டன குரல் எழுப்பினார். ஆனால் அன்றைய தினம் போரை நிறுத்துவதற்கான சக்தி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசிடம் தான் இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, இலங்கையில் போர் நிறுத்தம் ஒத்துக்கொள்ளப்பட்டதாக அறிக்கைவிட்டார். அதை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த லட்சக்கணக்கான தமிழ் மக்களை விமானம் மூலம் குண்டுகளை வீசி இலங்கை அரசு கொன்றது.

இந்திய அரசு முழு ஆதரவு தந்ததால் தான் நாங்கள் போரில் வெற்றி பெற முடிந்தது என இப்போது ராஜபக்சே கூறுகிறார். ஐ.நா.வில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு ஆதரவாக இருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினரையும் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றினோம் என கூறி இலங்கையில் உள்ள தமிழர்களை அழித்தது தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். இனிமேல் தமிழர்களை பற்றியோ, இலங்கை தமிழர்களை பற்றியோ பேசுவதற்கு தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை.

ஜெயலலிதா இன்றைக்கு இல்லாமல் போனதற்கு முழுக்காரணம் டி.டி.வி.தினகரன் தான். அப்போதே அவர் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டியதே அதற்கு காரணம். அதன் பிறகு தான் 2011-ம் ஆண்டு அவர்கள் குடும்பத்தை சார்ந்த அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார். இதன் மூலம் யார் துரோகி என்பதை யோசித்து பாருங்கள்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

முடிவில் ராசிபுரம் ஒன்றிய செயலாளர் காளியப்பன் நன்றி கூறினார். கூட்டத்திற்கு முன்னதாக அ.தி.மு.க.வினர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளிநாடுகளில் 30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. முதல் கட்டமாக 6 லட்சம் டன் அளவிற்கு இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டு உள்ளது. மேலும் 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரி உள்ளோம்.

காற்றாலை மின்சார முறைகேடு புகார் தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார். உடன்குடியில் கப்பல் இறங்குதளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராடி வருகிறார்கள். இதற்கு சுமூக தீர்வு காணப்படும். மத்திய அரசிடம் இருந்து 6 ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். ஆனால் 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தான் வருகிறது. இதை அதிகப்படுத்தி கொடுக்க கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்