நெல்லை சந்திப்பு பாலபாக்கியாநகரில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த தண்ணீரை அகற்றும் பணி மும்முரம்

நெல்லை சந்திப்பு பாக்கியாநகரில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த தண்ணீரை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2018-09-25 21:30 GMT
நெல்லை, 

நெல்லை சந்திப்பு பாக்கியாநகரில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த தண்ணீரை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நெல்லை மாநகர பகுதியில் மழை

நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை செய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் மாநகர பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

ஏற்கனவே பெய்த மழையால் நெல்லை டவுன் நயினார் குளம் நிரம்பியது. மழையின் காரணமாக நயினார் குளத்துக்கு வரும் தண்ணீர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மற்ற குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.

நயினார்குளம் தண்ணீர் உடையார்பட்டி குளத்துக்கு செல்வதற்கு கால்வாய் உள்ளது. சமீபத்தில் இந்த கால்வாய் சீரமைக்கப்பட்டு உடையார்பட்டி குளத்தில் தண்ணீர் விடப்பட்டது. இந்த குளம் மூலம் விவசாயம் செய்வது இல்லை. ஆனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடி நீருக்காக உடையார்பட்டி குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

குடியிருப்புக்குள் தண்ணீர் சூழ்ந்தது

உடையார்பட்டி குளத்துக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் கால்வாய்க்கு வரும் தண்ணீர் நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்கியா நகர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. அங்குள்ள வீடுகளை சுற்றியும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பகுதியில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். வடிகால் வசதி இல்லாததால், அங்கேயே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது.

வீடுகளில் சூழ்ந்து நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளை சுற்றியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு சில இடத்தில் எந்திரங்கள் மூலம் தண்ணீரை கால்வாய்க்கு திருப்பி விட்டனர். தற்போது தண்ணீர் வடிய தொடங்கி விட்டது. முழுவதுமாக தண்ணீரை அகற்றுவதற்கான பணி நடந்து வருகிறது.

நிரந்தரமாக...

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, “உடையார்பட்டி குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயையொட்டி நாங்கள் குடியிருந்து வருகிறோம். மழை காலத்தில் அவ்வப்போது தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் குடியிருப்புக்குள் வராமால் இருக்க அதிகாரிகள் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

மேலும் செய்திகள்