தம்பதியை கொடூரமாக வெட்டிய வடமாநில வாலிபர்
விருத்தாசலத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் வீடு புகுந்து தம்பதியை கொடூரமாக வெட்டினார். அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போலீசாரையும் அவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
நெய்வேலி 21-வது வட்டத்தை சேர்ந்தவர் மணி(வயது 50). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜம்(45). விருத்தாசலத்தில் உள்ள ரெயில் நகரில் மணி, சொந்தமாக வீடு கட்டியுள்ளார். மேலும் அந்த வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த வீடு அப்பகுதியில் தனி வீடாக அமைந்துள்ளதால், அவ்வப்போது மணி மற்றும் ராஜம் வந்து மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு நெய்வேலிக்கு சென்று விடுவார்கள். அந்த வகையில் நேற்று காலையில் மணியும், ராஜமும் விருத்தாசலத்துக்கு வந்தனர். பின்னர் ராஜம் மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்தார். மணி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், அங்கிருந்த கழியால் திடீரென ராஜத்தை சரமாரியாக தாக்கினார். இவரது அலறல் சத்தம் கேட்ட மணி விரைந்து வந்து, அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் மணியையும் அவர் சரமாரியாக தாக்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து செல்போன் மூலம் விருத்தாசலத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அந்த வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று களைகொத்தியால் அவர்களை கொலைவெறியுடன் கொடூரமாக வெட்டினார். இதில் அவர்களது முகம், உடல் முழுவதும் பலத்த காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து மணியின் உறவினர்களும், பொதுமக்களும் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் பிடிக்க முயன்றவர்களை கொலைவெறியுடன் தாக்கினார்.
இதை அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரை பொதுமக்களின் உதவியுடன் லாவகமாக பிடித்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது அந்த வாலிபர் போலீசாரையும் தாக்கியதாக தெரிகிறது.
இதற்கிடையே வடமாநில வாலிபர் தாக்கியதில் பலத்த காயமடைந்த மணி மற்றும் ராஜத்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிடிபட்ட வாலிபரை விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அசாம் மாநிலம் விஷ்ணுபூர் பகுதியை சேர்ந்த கமால் முகிலாரி மகன் ராமன் முகிலாரி(வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் எதற்காக தம்பதியை தாக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து வட மாநில வாலிபர், தம்பதியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.