சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்பு

சுற்றுப்புற தூய்மை குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2018-09-25 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் தூய்மை இந்தியா இயக்க வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி தூய்மை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து பேணுவதன் அவசியம் குறித்து, கரூர் அருகே தாந்தோன்றிமலை அரசு கல்லூரி வளாகத்தில் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது தாந்தோன்றிமலை மெயின்ரோடு வழியாக புறப்பட்டு சென்று கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது, நமது இந்திய திருநாட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பது நமது கடமையாகும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ- மாணவிகள் கோஷம் எழுப்பி சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவில் வளாகத்திலுள்ள குப்பைகள் அகற்றம்

பின்னர் அந்த கோவில் வளாகம், தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் தேங்கி கிடந்த குப்பைகள், வேண்டாத செடிகள் உள்ளிட்டவற்றை அகற்றி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இடையே தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரசு கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன், சுற்றுலாத்துறை அலுவலர் சிவக்குமார், கரூர் வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தூய்மை பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறியதாவது:-

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பில் கிராமங்களில் தற்போதுள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட உள்ளது. இதற்கென ஒரு நிறுவனம் மூலம் ஊரக பகுதிகளில் தூய்மையை கடைபிடிப்பது தொடர்பான கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தூய்மை கணக்கெடுப்பானது தூய்மை பாரத இயக்கத்தின் விரிவான அளவீடுகள் அடிப்படையில் பொது இடங்களின் தூய்மை, பொதுமக்களின் கருத்து, தூய்மை பாரத திட்ட பரிந்துரைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்