கடம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து கண்டன போஸ்டர் ஒட்டிய மலைவாழ் மக்கள்

கடம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து மலைவாழ் மக்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-25 23:00 GMT

டி.என்.பாளையம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2,500–க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு செல்ல 25 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மாக்கம்பாளையத்தில் உயர்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. பிளஸ்–1, பிளஸ்–2 படிப்பதற்காக மாணவ–மாணவிகள் தினமும் மாக்கம்பாளையத்தில் காலை 8 மணிக்கு புறப்படும் அரசு பஸ் மூலம் கடம்பூர் மேல்நிலை பள்ளிக்கு வருகிறார்கள்.

மாக்கம்பாளையம் வழித்தடத்தில் உள்ள கோம்பைத்தொட்டி, அருகியம், குரும்பூர், மொசல்மடுவு பகுதி மாணவர்களும் அதே பஸ்சில் கடம்பூர் பள்ளிக்கு வருகிறார்கள். அதே போல பள்ளிக்கூடம் முடிந்து கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு மாலை 6.30 மணிக்கு புறப்படும் அரசு பஸ்சில் 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வீடு திரும்புகிறார்கள்.

மாக்கம்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சர்க்கரைப்பள்ளம், மாமரத்துப்பள்ளம் ஆகிய பள்ளங்களில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. மாக்கம்பாளையத்துக்கு ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் காலை, மதியம், பிற்பகல், மாலை என 4 முறை இயக்கப்படுகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்புகருதி அதுவும் இயக்கப்படுதில்லை.

இந்தநிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் மாக்கம்பாளையம், சர்க்கரைப்பள்ளம் ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாடகை சரக்கு வாகனங்கள் கூட வருவதில்லை. வெள்ள அபாய எச்சரிக்கையால் காலை, மாலை நேரங்களில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு செல்லும் அரசு பஸ்சும் பாதுகாப்பு கருதி இயக்கப்படுவதில்லை. பள்ளி முடிந்து மாக்கம்பாளையம் செல்லும் பள்ளி மாணவ–மாணவிகள் கடம்பூரில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் அரசு பஸ்சில் ஏறுவார்கள். மாக்கம்பாளையம் வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சர்க்கரைப்பள்ளத்துடன் பஸ் நின்றுவிடும்.

இதனால் சில நேரங்களில் மாணவ–மாணவிகள் காட்டுவழியாக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாள்தோறும் அவதிப்படும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்க்க காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து கடம்பூர், குன்றி, கே.என்.பாளையம், மாக்கம்பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் மலைவாழ் மக்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்