கல்லறைகளில் சிலுவைகள் உடைப்பு; சாலை மறியல்
திண்டுக்கல்லில் கல்லறைகளில் இருந்த சிலுவைகள் உடைக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சியின் 34-வது வார்டு கிழக்கு மரியநாதபுரம் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம் உள்ளது. அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது, கல்லறைகளின் மீது சிலுவைகள் நட்டு வைப்பது வழக்கம். இதனால் அங்கு அனைத்து கல்லறைகளின் மீதும் சிலுவைகள் இருக்கும்.
இந்த நிலையில் நேற்று காலை, அந்த கல்லறை தோட்டம் வழியாக சென்றவர்கள், சில கல்லறைகள் மீது இருந்த சிலுவைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில கல்லறைகளில் இருந்த சிலுவைகள் பிடுங்கி வீசி எறியப்பட்டு கிடந்தன. நள்ளிரவில் மர்ம கும்பல் கல்லறை தோட்டத்துக்கு சென்று சிலுவைகளை உடைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் ஏராளமான கிறிஸ்தவர்கள் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் சிலுவைகள் உடைக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டதோடு, பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லறைகள் மீது இருந்த சிலுவைகளை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.