பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் தபால் ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-25 22:15 GMT

ஊட்டி,

அகில இந்திய தபால் ஊழியர் சங்கங்கள் சார்பில் கிராமிய தபால் ஊழியர்கள்(ஜி.டி.எஸ்.) கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை கடந்த 1.1.2016 முதல் முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி கோட்ட கிராமிய தபால் ஊழியர்கள் சங்க தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் சக்ரவர்த்தி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம், கிளை தபால் அலுவலகங்களில் கிராமிய தபால் ஊழியர்கள் 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். உண்ணாவிரத போராட்டம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இதில் கோட்ட செயலாளர் குமாரன் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நீலகிரி கோட்ட கிராமிய தபால் ஊழியர்கள் சங்க தலைவர் சந்திரமோகன் கூறியதாவது:

கிராமிய தபால் ஊழியர்கள் சங்கம், அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்கள் புதுடெல்லியில் ஒன்றுகூடி கிராமிய தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் 3 கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி இன்று(அதாவது நேற்று) உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தற்போது கிராமிய தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைத்தொகைக்கான கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை, ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

ஒரு ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விடுப்பினை தபால் ஊழியர்களது பணிக்காலத்தில் வைத்து பணமாக்கி கொள்ள அனுமதிக்க வேண்டும். 12, 24, 36 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கூடுதலாக ஊதிய உயர்வு அளிப்பதுடன், பண பலன்களை வழங்க வேண்டும். 65 வயது நிறைவு அடைவதற்கு முன்பே பணி ஓய்வில் செல்ல விரும்பும் கிராமிய தபால் ஊழியர்களுக்கு கமிட்டி பரிந்துரைத்த 3 விதமான ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் மட்டுமே பணியாற்றும் கிளை தபால் நிலையங்களை 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் வகையில் தரம் உயரத்த வேண்டும். கிராமிய தபால் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்தால் தபால் பட்டுவாடா செய்வது பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்