நெல்லையில் வெவ்வேறு இடங்களில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் அடித்து கொலை?

நெல்லையில் வெவ்வேறு இடங்களில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் மர்மமான முறையில் இறந்தனர்.

Update: 2018-09-25 21:30 GMT
நெல்லை, 

நெல்லையில் வெவ்வேறு இடங்களில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி சாவு

பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45). தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளன. குழந்தைகள் கிடையாது. சுப்பையாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். இதன் காரணமாக 2 மனைவிகளும் சுப்பையாவை விட்டு பிரிந்து சென்றனர். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில் பலத்த காயத்துடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சுப்பையா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பையா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் தெரியவந்தன.கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பையா அந்த பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் சிலருடன் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் சுப்பையாவை தாக்கி உள்ளனர்.

கொலையா?

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தால் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுப்பையாவை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகராஜ், மாரியப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில் சுப்பையா கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டல் தொழிலாளி

ராமநாதபுரம் மாவட்டம் வேம்பார் அருகே உள்ள காளிராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (48). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி மரியசெல்வி (46). இவர்களுக்கு ஜோதிலட்சுமி (6) என்ற பெண் குழந்தையும், காளிராஜ்குமார் (5) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. செந்தில்வேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கணக்காளராக வேலை செய்து வந்தார். அதன்பிறகு அங்கு இருந்து ஊருக்கு வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.அந்த பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து கொண்டு இருந்தார். நேற்று முன்தினம் வேலையை முடித்த பிறகு தனது விடுதிக்கு வந்தார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் செந்தில்வேல் கடுமையாக தாக்கப்பட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை தங்கும் விடுதி ஊழியர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்வேல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் வனராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்வேல் சந்தேக மரணம் என நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்த மனைவி மரியசெல்வி தனது குழந்தைகளுடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் கணவரின் உடலை பார்த்து கதறி அழுத்தார். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்