10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய தபால் ஊழியர்கள் உண்ணாவிரதம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அஞ்சல்துறையை தனியாருக்கு விட முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கிராமிய தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-25 22:45 GMT
பெரம்பலூர்,

கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும். நிலுவைத்தொகை கணக்கீட்டு முறையை மாற்றி அமைத்து 1.1.2016 முதல் அனைவருக்கும் வழங்க வேண்டும். குழுகாப்பீட்டு திட்டத்தில் மாதம் ரூ.500 பிடித்தம் செய்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும். பணிக்கொடை யை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கிடவேண்டும். பணிமூப்பு அடிப்படையில் 12 ஆண்டு, 24 ஆண்டு, 36 ஆண்டுகள் முடிந்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அஞ்சல்துறையை தனியாருக்கு விட முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தை சேர்ந்த கிராமிய தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளரும், ஸ்ரீரங்கம் கோட்ட செயலாளருமான பெரம்பலூர் விஷ்ணுதேவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் பல்வேறு அஞ்சல் ஊழியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மனோகரன், மகேஸ்குமார், சிவாஜி, தொழிற்சங்க நிர்வாகிகள் வீரமலை, முருகேசன், வெங்கடாசலம், செந்தில்குமார், கோகுலகிருஷ்ணன் உள்பட முசிறி, காட்டுப்புத்தூர், ஸ்ரீரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளை சேர்ந்த கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரம்பலூரில் தபால் அலுவலகத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 4-ந்தேதி சென்னையில் தலைமை தபால் பொது அலுவலகம் முன்பும், புதுடெல்லியில் 10-ந்தேதி இயக்குனர் பொது அலுவலகம் முன்பும் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக விஷ்ணுதேவன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்