மக்களுக்கு நல்லது செய்வதற்காக கிராமம் கிராமமாக சென்று வருகிறோம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
மக்களுக்கு நல்லது செய்வதற்காக கிராமம் கிராமமாக சென்று வருகிறோம் என்று அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
மானாமதுரை,
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இடைக்காட்டூரில் 32 லட்சம் ரூபாய் செலவில் தூய்மையே சேவை திட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.
மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயகுமார், இடைகாட்டூர் திருத்தல பணியாளர் ரெமிஜியஸ், தூய்மை பாரத இயக்குனர் பல்தாசர், வட்டார வளர்ச்சி அதிகாரி பத்மநாபன், நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- அரசின் நல்ல திட்டங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். முன்பு கிராமங்களில் வீடுகள்தோறும் மண்வெட்டி வைத்திருப்பார்கள், அதன் மூலம் சுற்றுப்புறங்களில் குப்பைகள், கழிவுகளை உடனடியாக அகற்றி விடுவார்கள், ஆனால் தற்போது வீடுகளில் மண்வெட்டிகளே இல்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நாங்கள் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம், அவர்கள் குறைகளை அறிந்து நிறைவேற்றி தர தயாராக இருக்கிறோம்.
நான் ஒரு சாதாரண விவசாயி என்னை அமைச்சராக ஆக்கியவர் ஜெயலலிதா. இதன் மூலம் அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரணமானவர்கள் அமைச்சராக முடியும் என்பது தெரிகிறது. இதனால் அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது. இவ்வாறு அவர் பேசினர்.
மேலும் நமது வீட்டையும் ஊரையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். பின் தூய்மையே சேவை திட்ட விளக்க ஊர்வலத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அதில் நடந்தபடி சென்றார். கிராமங்களில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன.
முடிவில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி நன்றி கூறினார்.