தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அழைப்பு

தாட்கோ திட்டங்களில் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் கூறியுள்ளார்.

Update: 2018-09-25 22:00 GMT

விருதுநகர்,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நிலம் வாங்கும் திட்டம் மற்றும் நிலம் மேம்படுத்துதல் திட்டத்தில் பயன்பெற விவசாய தொழில் செய்பவராகவும், வயது வரம்பு 18 முதல் 65 வரை உள்ளவராக இருக்க வேண்டும். தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு 18 முதல் 65 வரையும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமும் இருக்க வேண்டும்.

வாகனத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாகும். இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் மருத்துவமனை, மருந்துகடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு வயது வரம்பு 18 முதல் 45 வரையும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாகும். இதற்கு அரசு அங்கீகார நிறுவனத்தில் உரிய பதிவு செய்திருக்க வேண்டும்.

மகளிர் குழு, ஆண்கள் குழு, கலப்புக்குழு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதாரக் கடன் திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 65 வரையும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக இருக்க வேண்டும். கலெக்டரின் விருப்புரிமை நிதி மற்றும் மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதி திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், 30 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் மற்றும் பெற்றோர், பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வயது வரம்பு இல்லை.

இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோர் மற்றும் தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி–1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதி உதவி பெற 21 வயது நிரம்பியவராகவும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாவும் இருக்க வேண்டும். சட்ட பட்டதாரிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 21 முதல் 45 வரையும், பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதி உதவி திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு 25 முதல் 45 வரையும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இந்த திட்டதிற்கு இல்லை.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.60 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்