காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளை அகதிகளாக்க மத்திய அரசு முயற்சி

காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளை அகதிகளாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.;

Update: 2018-09-25 23:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம், கோவில்பத்து, செம்போடை, ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நடந்தது. வேதாரண்யத்தில் நடந்த மக்கள் சந்திப்பு பிரசார பயண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுப்பது, நிலக்கரி எடுப்பது, ஹைட்ரோ கார்பன் எடுப்பது உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி விவசாயிகளை அகதிகளாக்கி, வெளியேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போராடும்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அந்த சின்னத்தை எதிர்த்து குக்கர் சின்னத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டேன். சசிகலா மீது வழக்கு இருந்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதே நேரத்தில் அவரை ஆதரிப்பதாகவும் தினகரனை எதிர்ப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சமீபத்தில் கூறி உள்ளார். இது ஆடு உறவு, குட்டி பகை என்பதை போல் உள்ளது. இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்ட சபைக்கு தேர்தல் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் காசிநாதபாரதி, மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் தமிழரசன், டாக்டர் ராஜா, ஒன்றிய நிர்வாகிகள் வீரமணி, பாண்டியன், வேதாரண்யம் நகர செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்