கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு
கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.
நெல்லை,
கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.
தூய்மையே சேவை
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு “தூய்மையே சேவை” என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்ட வேண்டும், கைகழுவும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், முழு சுகாதார திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தூய்மையை சேவை என்ற நிகழ்ச்சி தூய்மை பாரத இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊக்குவிப்பாளர்களுக்கு பயிற்சி
நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளில் தூய்மை பாரத இயக்க செயல்பாடுகள் பற்றி பயிற்சி அளிக்க ஊக்குவிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
தொடக்க நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் லீமா ரோஸ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் ஷில்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பை தொடங்கினார். பின்னர் அவர், தூய்மை பாரத இயக்க கையேட்டை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தூய்மை பாரத இயக்கம்
நெல்லை மாவட்டத்தில் முழு சுகாதார இயக்க திட்டம் 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2014 அக்டோபர் மாதம் 2-ந் தேதி முதல் தூய்மை பாரத இயக்கம் என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது ரூ.12 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.நெல்லை மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற வேண்டும். திறந்தவெளியில் மலம்கழித்தலை முற்றிலும் அகற்ற வேண்டும். தினந்தோறும் கைகளை கழுவி உணவு உண்ணும் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.சுகாதார முறையில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இதுவரை 5 கிராம பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது. மீதி உள்ள கிராம பஞ்சாயத்துகளும் மத்திய அரசின் விருதினை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு ரதம்
திருமண மண்டபத்தில் இருந்து தூய்மையே சேவை இயக்க பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை புறப்பட்டது. அதை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் திரளான தூய்மை பாரத இயக்க திட்ட ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.