தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் அரசு உறுதி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கழுகுமலை,
தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.-காங்கிரஸ் துரோகம்
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரில் நமது தொப்புள்கொடி உறவான 1½ லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இந்தியாவில் மத்திய அரசில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தன.
அவ்விரு கட்சிகளும் இணைந்து எடுத்த தவறான நிலைப்பாட்டின் காரணமாக, இலங்கை தமிழர்களுக்கு மாபெரும் துயரம் நிகழ்ந்தது. இதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அப்போது இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்ஷே, தற்போது ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.
அதில், இந்தியாவில் மத்திய அரசில் காங்கிரசும், தமிழகத்தில் தி.மு.க.வும் ஒத்துழைப்பு தந்ததால்தான் விடுதலை புலிகளை முற்றிலுமாக அழிக்க முடிந்தது என்று கூறி உள்ளார்.
தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து தமிழர்களுக்கு செய்த துரோகத்தை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையை அ.தி.மு.க. நிறைவேற்றும்.
பா.ஜ.க.வுடன் சமரசமில்லை
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். ஆனால் நாகர்கோவில் தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற முடிந்தது. தமிழகத்தில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்று வரலாற்று சாதனையை படைத்தது. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும்போது, தமிழகம் வேகமாக வளர்ச்சி அடையும். ஆனால் அரசியல் ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ பா.ஜ.க.வுடன் சமரசம் என்பதற்கே இடமில்லை.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு, ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையின் குடிநீர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஆலையில் உள்ள ரசாயனங்களும் அகற்றப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய 15-வது நாளிலே தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமத்தை புதுப்பித்து வழங்காமல், ஆலையின் செயல்பாட்டை நிறுத்தியது.
பின்னர் 100-வது நாள் போராட்டத்தில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டப்பட்டு, அதில் கலந்து ஆலோசித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவினரும் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதில் சமரசத்துக்கே இடமில்லை.
நீட் தேர்வு
நீட் தேர்வின் வரலாறு தெரியாமல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வுக்கு வித்திடப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக கடைசி வரையிலும் தமிழக அரசு போராடியது. அதன்படி நீட் தேர்வில் இருந்து ஓராண்டு மட்டும் தமிழகம் விலக்கு பெற இருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அதனை தடுத்தது. நீட் தேர்வை கடைசி மாநிலமாக தமிழகம் ஏற்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.