தூத்துக்குடியில் பஸ் நிறுத்தத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் பஸ் நிறுத்தத்தில் நின்ற இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 வாலிபர்கள் வாகன சோதனையின் போது போலீசாரிடம் சிக்கினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பஸ் நிறுத்தத்தில் நின்ற இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 வாலிபர்கள் வாகன சோதனையின் போது போலீசாரிடம் சிக்கினர். அந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஷெரின் பாத்திமா (வயது 20). இவர் கடந்த 22-ந்தேதி மதியம் தனது தாய் வீட்டுக்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளை அவரை உரசியவாறு ஓட்டிச்சென்று, திடீரென அவர் கையில் வைத்து இருந்த செல்போனை ஒருவன் பறித்தான். மற்றொருவன் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தினான். அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மேலும் வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 வாலிபர்கள் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சிப்காட் போலீசார் 4-ம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மறவன்மடம் திரவியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (26), அய்யப்பன் (22) என்பதும், அவர்கள் ஷெரின் பாத்திமாவிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.