தூத்துக்குடி-கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

தூத்துக்குடி-கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-25 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி-கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் தூத்துக்குடி கோட்டம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தூத்துக்குடியில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சங்க உதவி செயலாளர் அதிசயராஜ், சங்க கோட்ட செயலாளர் செல்வராஜ், தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் பொன்ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகள்

ஊதியக்குழு அறிக்கையை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும், அன்று முதல் இன்று வரை ஊதிய நிர்ணயம் கணக்கிட்டு அதன் நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதியக்குழுக்கள் பரிந்துரைத்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாதத்தின் கடைசி நாள் பணி ஓய்வு நாளாக அறிவிக்க வேண்டும், தவறு செய்யும் ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் சங்க செயலாளர் ராமச்சந்திரன், சங்க தலைவர் சுந்தரம், பொருளாளர் இசக்கிமுத்து, தபால்காரர் சங்க தலைவர் இளங்கோவன், எழுத்தர் சங்க செயலாளர் மனோகர் தேவராஜ் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில், நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க மாநில தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் செல்வகிருஷ்ணன், கண்ணன், அருள்ராஜன், கோமதிசங்கர், சண்முகவேல், பெரியசாமி உள்பட ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்