தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2018-09-24 22:00 GMT
மூங்கில்துறைப்பட்டு,


மூங்கில்துறைப்பட்டு அருகே ராவத்தநல்லூர் சாத்தனூர் வலதுபுற கால்வாய் அருகில் உள்ள வேப்ப மரத்தில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தூக்கில் பிணமாக தொங்கிய பெண்ணின் உடலை மீட்டு, அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரித்தனர். ஆனால் அந்த பெண் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்கில் பிணமாக கிடந்த பெண் யார்? அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்